பாகிஸ்தான், ஏப்ரல் 7 – பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான, சர்வதேச ஏர்லைன்ஸ்(பிஐஏ)-ல் போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் இருந்த, 350 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
30,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் பெரும்பான்மையானோர் அரசியல் பின்னணியிலும், சிபாரிசின் பேரிலும் பணிக்கு சேர்வதாகவும்,
அவர்களில் பலர் போலியான கல்வி சான்றிதழ்களையே சமர்பித்துள்ளதாகவும் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிஐஏ நிறுவன ஊழியர்கள் அனைவரின் கல்வி சான்றிதழ்களையும் சரிபார்க்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவரும் இந்த சரிபார்க்கும் பணி பற்றி பிஐஏ நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் மஷ்ஹூத் தாஜ்வார் கூறுகையில்,
இதுவரை 350 ஊழியர்கள் போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து விமானிகள், விமானப் பணிப்பெண்கள், சில பொறியாளர்களும் அடங்குவர்” என்று கூறியுள்ளார்.
பிஐஏ – வில் சில மூத்த விமானிகளே போலியான சான்றிதழ்களை வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.