கோலாலம்பூர், ஏப்ரல் 7 – மாயமான மாஸ் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, இந்தோனேசியாவின் வான் வெளியைக் கடந்து சென்றதாகக் கூறப்படும் தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலாகா (டிசிஏ) மறுத்துள்ளது.
இது குறித்து டிசிஏ தலைவர் அஸாருடின் அப்துல் ரஹ்மான் கூறுகையில், “அந்த தகவல் அதிகாரப்பூர்வமானது கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், அஸாருடின் அந்த தகவலை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்துவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இராணுவத்தில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சிஎன்என் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்த செய்தியில், ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்ப MH370 விமானம் இந்தியப் பெருங்கடலுக்குச் செல்வதற்கு முன்பாக இந்தோனேசியாவின் வான்வெளியைக் கடந்து சென்றதாக குறிப்பிட்டிருந்தது.
இதற்கு முன்பாக கடந்த மாதம், இந்தோனேசிய விமானப் படையின் பேச்சாளர் ஹாடி தியாஜந்தா வெளியிட்ட அறிக்கையில், இந்தோனேசியாவில் விமானம் பறந்திருந்தால் நிச்சயமாக தங்களது இரு ரேடார்கள் அதை பதிவு செய்திருக்கும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.