புதுடெல்லி, ஏப்ரல் 18 – இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி, மே 12-ஆம் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
இந்நிலையில் 5-வது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் நேற்று பெரியளவில் அசம்பாவிதம் இன்றி தேர்தல் நடந்தது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள சட்டீஸ்கரில் 63 சதவீதமும், ஜார்கண்டில் 62 சதவீதமும் வாக்கு பதிவானது.
இதன் மூலம், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. நேற்று நடந்த 5-வது கட்ட தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மக்கள் அதிகளவில் வந்து வாக்களித்தனர்.
‘‘எல்லையில் நடைபெறும் தீவிரவாத தாக்குதலுக்கு முடிவு ஏற்படும் வகையில் மத்தியில் புதிய அரசு ஆட்சி அமைக்க வாக்களித்தோம்’’ என அங்குள்ள மக்கள் கூறினர்.
சட்டீஸ்கர் மாநிலம் கன்கர் மக்களவை தொகுதியில் உள்ள பார்வி வாக்குச்சாவடியில் தேர்தல் முடிந்தபின் ஓட்டு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடி அதிகாரிகள் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது மாவோயிஸ்ட்கள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெரும்பாலும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.