Home உலகம் தெற்கு சூடானில் இனப்படுகொலை – ஐ.நா குற்றச்சாட்டு

தெற்கு சூடானில் இனப்படுகொலை – ஐ.நா குற்றச்சாட்டு

574
0
SHARE
Ad

Africaஜுபா, ஏப்ரல் 23 – ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் அரசு துருப்புகளுக்கும், முன்னாள் துணை அதிபரின் போராளிப் படைகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் அதிகார சண்டையில் அப்பாவிப் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் பலியானதுடன் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு தேடி தங்களின் இருப்பிடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் போராளிகள் இயக்கம் கடந்த வாரம் எண்ணெய் வளம் மிக்க பென்டியு நகரத்தைக் கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இங்கு இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அந்நாட்டு அதிபர் சல்வார் கிர், டிங்கா இனத்தவராகவும், முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சர் நுர் இனத்தவராகவும் இருக்கின்றனர். இந்நிலையில் பென்டியு நகரில் போராளிகள் டிங்கா இனத்தவரையும், அரசுத் துருப்புகள் நுர் இனத்தவரையும் பலி வாங்குவதாக ஏராளமான தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகொலை செய்யப்பட்ட மக்களின் உடல்கள் குவியல்களாகக் கிடந்ததைக் கண்டதாக தெற்கு சூடானில் இருக்கும் ஐ.நாவின் உயர்மட்ட மனிதாபிமான அதிகாரி டோபி லான்சர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நுர் இன அல்லாதவர்களும், வெளிநாட்டவர்களும் தனித்தனியே பிரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்த கலி-பல்லி மசூதியில் தஞ்சம் புகுந்திருந்த சுமார் 200 பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை ஒன்றில் மறைந்திருந்த நுர் இன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோரும் போராளிகள் குழுவை வரவேற்கவில்லை என்ற காரணத்தினால் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா பணிக்குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த படு கொலைகள் பற்றி போராளிகள் இயக்கத்தின் தலைவரான பிரிகேடியர் லுல் ருயாய் கோயாங் கூறுகையில், “பென்டியு பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எங்கள் படைகள் பொறுப்பல்ல” என்று கூறியுள்ளார்.