சான் பிரான்சிஸ்கோ, ஏப்ரல் 23 – உலகம் முழுவதும் நேற்று புவி நாள் கடைபிடிக்கப்பட்டது. நாம் வாழும் பூமியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஜான் மெக்கானெல் (John McConnell), மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்று தெரிவித்தார்.
அதே போன்றதொரு கருத்தினை, அமெரிக்காவின் சுற்றுச்சூழலியல் நிபுணரும், மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவரும் தெரிவித்தார். மேலும் அவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியை அறிவித்து அழைப்பு விடுத்தார். இதனால் அந்நாள் உலக புவி நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக மாசுபடுதலைக் குறைக்கவும், எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் போராடி வருகின்றன,
இந்நிலையில் உலக மாசுபாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பயன்படுத்தப்பட்டு பழுதான அனைத்து மின்னணு சாதங்களையும் திரும்ப பெற்று மறு சுழற்சிக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக தனது இணையதளத்தில் சிறப்புப் பகுதியையும் ஆப்பிள் ஆரம்பித்துள்ளது. மேலும் அனைத்து ஆப்பிள் நிறுவனத்தின் கடைகளிலும் ஆப்பிள் தயாரிப்புகளை இலவசமாக மறுசுழற்சி செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.