அபுஜா, ஏப்ரல் 25 – மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென, போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு, கடந்த சில வருடங்களாக ஆயுதமேந்தி போராட்டம் நடத்தி வருகின்றது.
மேற்கத்திய கல்விக்குத் தடை என்று பொருள்படும் இவர்களின் பெயருக்கு ஏற்ப, கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பு அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஏராளமான பள்ளிகளை தாக்கி ஆயிரக்கணக்கானவர்களை கொன்று வருகின்றது.
கடந்த 14ஆம் தேதி, போர்னோ மாநிலத்தின் இடைநிலைப் பள்ளி ஒன்றிலிருந்து 230 பெண்களை, போராளிகள் கடத்திச் சென்றனர். அவர்களில் பலரை இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதே நாள் தலைநகர் அபுஜாவின் எல்லையில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றையும், அவர்கள் வெடி வைத்துத் தகர்த்தனர். இதில் 75 பேர் பலியாகினர். இஸ்லாமிய மதத்தின் எழுச்சிக்கான மோதலாக இருந்த இவர்களின் போராட்டம், இத்தகைய செயல்களினால் வகுப்புவாத வன்முறைகளுடன் இணையக்கூடும் என்ற அச்சம் அங்கு எழுந்துள்ளது.
ஐந்து வருடங்களாக நடந்துவரும் இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக நைஜீரியாவின் அனைத்துத் தலைவர்களும் ஒருங்கிணைந்து போக்கோ ஹரம் இயக்கத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணிக்கு நேற்று வேண்டுகோள் விடுத்தனர். நாட்டின் 36 மாநிலங்களின் கவர்னர்களையும் பாதுகாப்புக் கூட்டம் ஒன்றிற்கு அழைத்த அதிபர் குட்லக் ஜோனாதன் இந்தத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தார்.
இதன் பின்னர் இவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “போக்கோ ஹரம் இயக்கத்தினர் நடத்துவது மதத்திற்கு எதிரான போர் அல்ல, இது நைஜீரிய மக்களுக்கு எதிரான போர். இதனை உணர்ந்து, அனைவரும் அவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும்” என்று கூறியுள்ளனர்.