ஐதராபாத், ஏப்ரல் 28 – தெலுங்கு சினிமாவில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு வருடம் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிப் படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ், பல படங்களை தயாரிப்பதுடன், இயக்கவும் செய்துள்ளார்.
தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ‘ஆகடு’ படத்தில் பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்திருந்தனர். முதல் நாள் படப்பிடிப்பில் அப்படத்தின் இணை இயக்குனர் சூர்யாவுக்கும், பிரகாஷ் ராஜூவுக்கும் மோதல் ஏற்பட்டது. கடுமையாக திட்டிக்கொண்டனர்.
இதையடுத்து பிரகாஷ்ராஜ் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் சோனு சூட்டை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்துக்கின்றனர். பிரகாஷ்ராஜ் தகாத வார்த்தைகளில் தன்னை திட்டியதாக சூர்யா தெலுங்கு இயக்குநர் சங்கத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து இயக்குநர் சங்கம் பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிக்க ஒரு வருடம் தடை விதிப்பதென்று முடிவு செய்தது. நடிகர் சங்கத்துக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘ஆகடு’ படப்பிடிப்பில் இணை இயக்குனரை நான் தகாத வார்த்தைகளால் திட்டவில்லை. எனக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இயக்குனர் சீனு வைட்லாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். ஒருநாள் படப்பிடிப்புக்கு சென்றேன். அதன் பிறகு எனக்கு பதில் வேறு நடிகரை ஒப்பந்தம் செய்தனர்.
நடிகரை மாற்றுவது இயக்குனர் உரிமை. அதில் நான் தலையிடவில்லை. தற்போது குறிப்பிட்ட ஒருவர் தூண்டுதலில் இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது. நான் 20 ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதற்கு ஓராண்டு எனக்கு தடை விதிப்பது நியாயமல்ல.
நடிகர் சங்கத்திடம் என் தரப்பு நியாயங்களை விளக்குவேன். என்னை கல்லால் அடித்தாலும் அந்த கல்லை கொண்டு வீடு கட்டுவேன். சினிமாவில் இருந்து விரட்ட நினைத்தாலும் மேலும் வளரத்தான் செய்வேன் என பிரகாஷ்ராஜ் கூறினார்.