Home உலகம் வாடிகன் நகரில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம்!

வாடிகன் நகரில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம்!

542
0
SHARE
Ad

popeவாடிகன்சிட்டி, ஏப்ரல் 28 – வாடிகன் நகரில் நடந்த விழாவில், 2 முன்னாள் போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

இயேசுகிறிஸ்துவின் வழியில் புனிதமான வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர் ஒருவர், இறப்புக்கு பிறகும் மற்றவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்றிருந்தால், அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் உலகின் எந்த இடத்திலும் ஆலயம் எழுப்பி அவருக்கு வணக்கம் செலுத்த கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில், இறப்புக்கு பிறகும் அற்புதங்கள் நிகழ்த்திய முன்னாள் போப் ஆண்டவர்கள் 23–ஆம் ஜான், இரண்டாம் ஜான்பால் ஆகியோரை புனிதர்களாக அறிவிக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்திருந்தார்.

அவர்களை முறைப்படி புனிதர்களாக அறிவிக்கும் விழா, வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, உலகின் பல நாடுகளில் இருந்தும், ரோம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர்.

இடம் இல்லாததால், சதுக்கத்துக்கு வெளியே டிபேர் ஆறுவரை கூட்டம் திரண்டிருந்தது. ஆங்காங்கே ராட்சத திரைகள் அமைக்கப்பட்டு, அதில் நிகழ்ச்சி காண்பிக்கப்பட்டது.vat

இந்நிகழ்ச்சியில், முன்னாள் போப் ஆண்டவர் 16–ஆம் பெனடிக்கும் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், புனிதர் பட்ட அறிவிப்புக்கு உரிய சில சடங்குகளுக்கு பிறகு, போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனிதர் பட்ட அறிவிப்பை லத்தீன் மொழியில் வெளியிட்டார்.

‘ஆழ்ந்த யோசனை, பரிசீலனை மற்றும் ஆண்டவரிடம் உதவி கேட்டு பிரார்த்தனை செய்த பிறகு, 23–ஆம் ஜான், இரண்டாம் ஜான்பால் ஆகியோரை புனிதர்களாக அறிவிப்பதுடன், அவர்களை புனிதர்கள் பட்டியலில் சேர்க்கிறோம். அவர்கள் ஒட்டுமொத்த திருச்சபையால் வணங்கத்தக்கவர்கள் ஆவர்’ என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறினார்.

அப்போது, அங்கிருந்தவர்கள் பலத்த கைதட்டலுடன் வரவேற்றனர். 2 முன்னாள் போப் ஆண்டவர்களை புனிதர்களாக அறிவிக்கும் நிகழ்ச்சி, மற்றொரு முன்னாள் போப் ஆண்டவர் முன்னிலையில் நடப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.