புது டில்லி, மே 3 – தமிழகமே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான வேளையில்,2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் மீது புது டில்லி சிபிஐ (CBI) நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய கலைஞர் தொலைக்காட்சி பண பரிவர்த்தனை விவகாரத்தில் மத்திய அமலாக்கத் துறைஅந்த மூவர் உள்பட 19 பேர், எதிர்வரும் மே 26-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என குற்றச் சார்வு (சம்மன்) அனுப்ப தில்லி சிபிஐ நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மத்திய அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தாக்கல் செய்திருந்த குற்றப் பத்திரிகையை வெள்ளிக்கிழமை பரிசீலித்த சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
குற்றச்சாட்டு என்ன?
“அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ. 200 கோடி அளவுக்கு ராசா உள்ளிட்ட அவரது நண்பர்களுக்கு லஞ்சமாக வழங்கியுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு விசாரணை தொடங்கியபோது அப் பணத்துக்கு வட்டி போட்டு, மொத்தம் ரூ. 223.44 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் திருப்பிக்கொடுத்துள்ளது.
அப் பணத்தை வங்கியில் செலுத்தி, அதை சட்டப்பூர்வ பரிவர்த்தனையாக கலைஞர் டிவி கணக்கு காட்டியுள்ளது. இவை அனைத்தும் சிபிஐவழக்கிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, அந்த மதிப்புக்கான சொத்தை 2011, ஆகஸ்ட் 30-ஆம் தேதி முடக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனவேதான், மேற்கண்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன‘ என்றுகுற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில்குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற நோக்குடன் தவறு செய்தல், ஊழல்செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்தவழக்கில் இரு குற்றப்பத்திரிகைகள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் இறுதி கட்ட விசாரணை மே 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.