ஹட்ஜாய் (தாய்லாந்து), மே 6– மலேசியர்கள் அதிக அளவில் செல்லும் தென் தாய்லாந்தின் சோங்லா மாவட்டத்தில் உள்ள ஹட்ஜாயில் இன்று நான்கு தொடர் குண்டுகள் வெடித்துச் சிதறின.
இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் காயமுற்றனர். பிரின்ஸ் ஆப் சோங்லா மருத்துவமனையின் அடுக்குமாடி கட்டட நுழைவாயில் அருகில் கிடந்த 5ஆவது வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது.
ஹட்ஜாய் காவல் (போலீஸ்) நிலையம்எதிரே உள்ள காவல் துறை குடியிருப்பு அருகே இருக்கும் செவன் இலெவன் பேரங்காடி பகுதியில் இன்று பகல் 1.30 மணியளவில் இந்த குண்டுகள் வெடித்து சிதறின.
போலீஸ் குடியிருப்பில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பல வாகனங்கள் சேதமுற்றன. அப்பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
குண்டு வெடிப்பிற்கு பிறகு அந்த இடத்தில் தீப்பிடித்து எரிந்ததால்,அதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அந்த சமயத்தில் ஹட்ஜாய் ரயில் நிலையம் அருகே மேலும் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன.
ரோபின்சன் பேரங்காடி அருகே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதன் பின்னர் பிரின்ஸ் ஓப் சோங்லா மருத்துவமனை அடுக்குமாடி கட்டடம் அருகே கிடந்த வெடி குண்டு கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
படம்: EPA