Home நாடு செல்லியல் பார்வை : விண்ணப்பப் பாரங்களில் ‘இனம்’ – ஒற்றுமைக்கான நல்வாய்ப்பைத் தவறவிட்ட பிரதமர்!

செல்லியல் பார்வை : விண்ணப்பப் பாரங்களில் ‘இனம்’ – ஒற்றுமைக்கான நல்வாய்ப்பைத் தவறவிட்ட பிரதமர்!

693
0
SHARE
Ad

20140122_Najib-Razak_reutersகோலாலம்பூர், மே 11 – “1-மலேசியா” என்ற தாரக மந்திர முழக்கத்தோடு பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கும், பிரதமர் நஜிப், இன ஒற்றுமைக்காக துணிந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நெடுங்காலமாக நிலவி வந்திருக்கின்றது.

ஆனால், இதுவரை நஜிப் அப்படி எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

அப்படிப்பட்ட நடவடிக்கைகளைத் தீர்க்கமாக எடுக்க வேண்டிய வாய்ப்பு தன் முன்னே வந்து நின்ற போதெல்லாம், அந்த பொறுப்பிலிருந்து நஜிப் நழுவியே சென்றிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

விண்ணப்ப பாரங்களில் இனம் என்ற பிரிவை நீக்க கோரிக்கை

மலேசியாவின் எந்த விவகாரத்திற்காக ஒரு விண்ணப்ப பாரத்தைப் பூர்த்தி செய்தாலும் அதில் கண்டிப்பாக நீங்கள் எந்த இனம் என்ற கேள்வி இடம் பெறும்.

அனைவரும் மலேசியர்கள் என்ற முறையில் விண்ணப்ப பாரங்களில் – இந்த இனம் பிரித்துப் பார்க்கும் போக்கை ஒழிக்க வேண்டும் – என பல தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் அண்மையக் காலங்களில் விடுக்கப்பட்டன.

அமைச்சரவை உறுப்பினர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், சில நாட்களுக்கு முன்னால் இதுபற்றி கருத்துரைத்த நஜிப் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களில் இனத்தைக் குறிப்பிடும் பகுதியை நீக்க வேண்டுமென அமைச்சரவை முடிவு செய்யவில்லை எனவும் இது தொடர்பான அரசாங்கக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

அண்மையில் தைப்பிங்கில் அம்னோ கட்டடத்தை திறந்து வைத்த பின்னர் பிரதமர் நிருபர்களிடம் பேசியபோது, “அரசாங்க அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களில் இனம் என்ற பகுதியை அகற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது. அவ்விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், எந்த வித முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதுள்ள சூழலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என்று கூறியிருக்கின்றார்.

ஆனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் எந்துலு  அரசாங்க அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களில் இனம் என்ற பகுதி கட்டம் கட்டமாக அகற்றப்படும் என்று கூறியிருந்தார்.

பாரத்தில் குறிப்பிடாமலேயே இனம் என்ற அடையாளம் நிலைத்திருக்கும்

ஒருவர் பிறந்தவுடன் அவர் என்ன இனம் என அவரது பிறந்த பத்திரத்தில்  குறிப்பிடப்படுவதில் எந்தவிதத் தவறுமில்லை.

அதோடு அவர் வாழும் காலம் முழுமைக்கும் அவரது இன அடையாளம் அரசாங்கப் பதிவேடுகளில் நிலைத்திருக்கும்.

ஆனால், ஒவ்வொரு முறையும் –  ஒவ்வொரு சிறிய விவகாரத்திற்கும் – ஒரு விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்யும் போது,

அதில் இனம் என்ற பிரிவு இடம் பெறுவது, இளைய சமுதாயத்தினருக்கு, ஒரே மலேசியா கொள்கையை விரும்புபவர்களுக்கு ஒரு நெருடலாகவே இருந்து வந்திருக்கின்றது.

ஆனால், அதைக் கூட செய்யாமல், அன்று சீர்திருத்தங்களைக் கொண்டு வருவேன் என்று முழங்கிய நஜிப் இன்று தள்ளிப் போடுகின்றார்.

தனது சீர்திருத்தத்தை இந்த விண்ணப்ப பார விவகாரத்திலேயே மேற்கொள்ள அவருக்கு கிடைத்த சிறந்ததொரு வாய்ப்பை அவர் மீண்டும் தவற விட்டிருக்கின்றார்.

இதைக் கூட செய்யவில்லை என்றால் – செய்ய முடியவில்லை என்றால் – பின்னர், என்னதான் அவரது 1 மலேசியா கொள்கை?

எப்போதுதான் சீர்திருத்தங்களை அவர் மேற்கொள்வார்?

அல்லது 1 மலேசியா என்பது காலம் முழுவதும் வெறும் வாய்வழி சித்தாந்த முழக்கமாகவே நின்று நிலைத்து விடுமா?

-இரா.முத்தரசன்