Home நாடு அடுத்த மஇகா துணைத் தலைவர் யார்? – சோதி – சரவணன் மோதல் இப்போதே தொடங்கியது!

அடுத்த மஇகா துணைத் தலைவர் யார்? – சோதி – சரவணன் மோதல் இப்போதே தொடங்கியது!

604
0
SHARE
Ad

m.saravanan1-may7கோலாலம்பூர், மே 14 – கடந்த மஇகா தேர்தல்களில் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்ற டத்தோ சோதிநாதன், டத்தோ சரவணன் இருவருக்கும் இடையில், அப்போது முதல், திரை மறைவில் அரங்கேறி வந்த மறைமுக அரசியல் போராட்டங்கள் தற்போது முதல் முறையாக அம்பலத்துக்கு வந்துள்ளன.

சரவணனின் கனவுத் திட்டமான ‘நாம்’ அமைப்பின் மாநில அளவிலான அறிமுக நிகழ்ச்சியை சிரம்பானிலுள்ள ம.இ.கா கட்டிடத்தில் நடத்துவதற்கு, நெகிரி செம்பிலான் மாநில ம.இ.கா தலைவர் என்ற முறையில் சோதிநாதன் அனுமதி அளிக்க மறுத்துள்ளார்.

இதன்மூலம், சோதி, சரவணனுக்கும் இடையிலான அரசியல் போராட்டப் புகைச்சல்  கட்சியில் தொடங்கி விட்டது தெளிவாகியுள்ளதாக, ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

அடுத்த துணைத் தலைவருக்கான போட்டியா?

sothinathan2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நடப்பு தேசியத் தலைவர் பழனிவேல் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்நிலையில், திட்டமிட்டபடி பழனிவேல் பதவி விலகினால், நடப்பு துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் ஏகமனதாக இடைக்காலத் தேசியத் தலைவராகி விடுவார்.

அனைவருக்கும் ஏற்புடையவராகத் திகழும் அவரை யாரும் எதிர்த்து நிற்கப் போவதில்லை. அப்படியே நின்றாலும் வெற்றியடைவது சுலபமுமல்ல.

டாக்டர் சுப்ரா தேசியத் தலைவரானால், அடுத்த துணைத் தலைவர் பதவிக்கு குறி வைத்து காய்களை நகர்த்தி வரும் சரவணனுக்கு சாதகமாக இருப்பவை அவர் வகிக்கும் துணையமைச்சர் பதவியும், அவர் அமைத்துள்ள ‘நாம்’ அமைப்புமாகும்.

நாம் அமைப்பு இந்திய சமுதாயத்தில் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளதோடு, அரசாங்கம் அதனை இந்திய சமுதாயத்திற்கான திட்டமாக அங்கீகரித்து, இதன் செயல் திட்டங்களுக்காக 37 மில்லியன் ரிங்கிட் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் பதவிக்கான போட்டி நடக்கும்போது, சரவணனுக்குப் பின்னணியில் நாம் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக – களமாகத் திகழும்.

காரணம், மாநில ரீதியாக நாம் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் ம.இ.காவின் முக்கியப் புள்ளகளாகவே இருக்கின்றார்கள்.

அதனை முறியடிக்கும் விதத்திலேயே, தேசியத் துணைத் தலைவர் பதவிக்குக் குறி வைத்திருக்கும் சோதிநாதன், இப்போதே அரசியல் சதுரங்கக் காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டார்.

அதில் ஒரு வியூகம்தான், சிரம்பானிலுள்ள ம.இ.கா கட்டிடத்தில் மாநில அளவிலான நாம் அமைப்பு நிகழ்ச்சியை நடத்த விடாமல் சோதிநாதன் தடை செய்திருப்பது.

நெகிரியின் அரசியல் நிலைமை

இப்படிச் செய்வதன் மூலம், நாம் அமைப்புக்கும் ம.இ.காவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சோதிநாதன் முயற்சி செய்கின்றார் என்றும –

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ம.இ.கா கிளைகளிடம் சரவணன் நாம் மூலம் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்வதை மறைமுகமாகத் தடை செய்கின்றார் என்றும் நெகிரி செம்பிலான் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், நெகிரி செம்பிலானிலுள்ள 8 தொகுதிகளில் ஏறத்தாழ நான்கு அல்லது 5 தொகுதிகள் சோதிநாதனுக்கு எதிர்ப்பான போக்கைக் கொண்டவை – சரவணனுக்கு நெருக்கமான தொகுதித் தலைவர்களைக் கொண்டவை –என்பதால்,

நெகிரியில் சரவணனின் அரசியல் ஆதிக்கத்தை முறியடிப்பது என்பது சோதிநாதனுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை.

அதிலும் நாம் இயக்கத்தின் மூலம் தங்களுக்கும் தங்களின் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏதாவது பலன்கள் இருக்குமா என்பதை அறிந்து கொள்ள ம.இ.கா தலைவர்கள் ஆர்வமாக இருப்பதால், ‘நாம்’ கூட்டம் எங்கே நடந்தாலும், நிச்சயம் ம.இ.கா தலைவர்கள் அங்கு செல்லத்தான் போகின்றார்கள்.

பிரதமரின் அங்கீகாரத்துக்கு எதிரான போக்கால் சோதிக்கு செனட்டர் பதவி கிடைக்குமா?

Malaysian Prime Minister Najib Razak visits Vietnamஇதற்கிடையில் சரவணனின் நாம் திட்ட முயற்சிகளும், அதன் அமைப்பு முறையும் பிரதமரை வெகுவாகக் கவர்ந்துள்ளதாக ஒரு சில ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே, பொதுத் தேர்தலுக்கு முன்பாக பொங்கல் நிகழ்ச்சி ஒன்றை ஒரு இலட்சம் பேர்களுடன் நடத்திக் காட்டி பிரதமரின் பாராட்டைப் பெற்ற சரவணன் தற்போது நாம் திட்டத்தின் மூலம் பிரதமரைக் கவர்ந்து விட்டார்.

அதற்காகத்தான் பிரதமரும் 37 மில்லியன் ரிங்கிட் அங்கீகரித்து விட்டார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜூன் மாதத்தில் ம.இ.கா சார்பாக செனட்டர்களாக நியமிக்கப்படவிருப்பவர்களில் சோதிநாதனும் ஒருவர் என்று கூறப்படுகின்றது.

ஆனால், கடந்த பொதுத் தேர்தலின்போது, தனக்கு தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டுமென போராட்டம் நடத்திய சோதி, பிரதமரின் நெகிரி செம்பிலான் வருகை ஒன்றின்போது, அவருக்கு எதிராக தனது ஆதரவாளர்களைத் திரட்டி, தனக்குத்தான் தெலுக் கெமாங் வழங்கப்பட வேண்டுமென கோஷமிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இந்த சம்பவத்தினால் பிரதமர் இன்னும் சோதிநாதன் மேல் அதிருப்தியில் இருக்கின்றார் என்றும், அதனால், சோதிக்கு இந்த முறை செனட்டர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்ற ஆரூடங்களும் ம.இ.காவில் பரவி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்திய சமுதாயத் திட்டமான நாம் திட்டத்தின் கூட்டத்தை சிரம்பானில் நடத்துவதற்கு சோதி அனுமதி வழங்க மறுத்துள்ள விவகாரம், பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஒரு சில ம.இ.கா வட்டாரங்கள் சுட்டிக் காட்டின.

இதனால், ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் சமர்ப்பித்துள்ள சோதிநாதனின் செனட்டர் நியமனத்தை பிரதமர் ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கலாம் என்றும் அந்த ம.இ.கா வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.