சென்னை, மே 28 – திருமணத்துக்கு வருபவர்களிடம் மாற்றுத் திறனாளி அமைப்புக்கு உதவ நிதி தரும்படி விஜய், அமலாபால் கோரிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் காதல் திருமணம் வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
திருமண அழைப்பிதழை நடிகர், நடிகைகள், இருவரும் நேரில் சென்று வழங்கி வருகின்றனர். இது பற்றி அமலாபால் கூறும்போது, ‘திருமணம் முடிவதற்கு முன் நடிப்புக்குத்தான் முன்னுரிமை கொடுத்துவந்தேன்.
இப்போது என்னுடைய முன்னுரிமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனிமேல் கமர்ஷியல் படங்களில் நடிக்க மாட்டேன். வித்தியாசமான வேடங்கள் வந்தால் அதில் நடிப்பதுபற்றி யோசிப்பேன் என்றார்.
‘எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வீர்கள்?‘ என்று அமலாவிடம் கேட்டபோது இடைமறித்து பதில் அளித்தார் விஜய். ‘எனது உற்ற தோழியை நான் மணக்க உள்ளேன். நண்பர்களாக இருந்து அவரை மணப்பது என்பதில் நல்ல புரிதல் இருக்கிறது.
எங்களைப்பற்றிய எல்லா விவரமும் இருவருக்கும் நன்றாக தெரியும். குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடும் எண்ணம் இல்லை. சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்வோம். திருமணத்துக்கு பிறகு தேனிலவு செல்வதுபற்றி முடிவு செய்யவில்லை. சைவம் படத்தை வெளியிடுவதில் வேலையாக இருக்கிறேன் என்றார்.
திருமண அழைப்பிதழில், ‘யாரும் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து சொல்ல வேண்டாம், அதற்கு பதிலாக மாற்றுத் திறனாளிகள் அமைப்பான எபிலிட்டி பவுண்டேஷனுக்கு உதவ அந்த அமைப்பின் பெயரில் காசோலை அல்லது டிராப்ட் தாருங்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.