கலிபோர்னியா, ஜூன் 2 – திராட்சை பழம் அளிக்கும் பொதுவான சுகாதார நலன்கள் தவிர கண் பாதுகாப்பிலும் இது முக்கிய பங்களிக்கின்றது என்ற தகவலை சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளப்படும் திராட்சைப் பழத்தினால் கண் விழித்திரை அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது என்று அவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
எலிகளிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டபோது தினசரி உணவில் திராட்சை சேர்க்கப்பட்ட எலிகளின் விழித்திரை இயக்கம் மிகவும் வியப்பூட்டுவதாக அமைந்திருந்தது என்று புளோரிடா மாகாணத்தின் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளரான அபிகைல் ஹக்கம் தெரிவித்துள்ளார்.
கண்களில் ஏற்படும் அழுத்தங்களை எதிர்கொள்ள செல்கள் அளவிலான சமிக்ஞை மாற்றங்களை திராட்சையானது ஏற்படுத்துகின்றது என்றும் ஹக்கம் குறிப்பிட்டார். வெளிச்சத்திற்கு செயல்படும் போட்டோரிசெப்டர்ஸ் என்ற செல்கள் விழித்திரையில் உள்ளன.
எனவே விழித்திரை சிதைவு கொண்டவர்களால் வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. திராட்சை கலந்த உணவினை எடுத்துக் கொள்ளுவதன்மூலம் இத்தகைய குறைபாடு கொண்ட எலிகளால் வெளிச்சத்தை உணர இயலுமா என்பதையும் தற்போது இந்த விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.
இந்த முறையில் எலிகளின் விழித்திரை இயக்கம் பாதுகாக்கப்பட்டதோடு அவற்றின் விழித்திரைகள் வலுவடைந்தும் காணப்பட்டதை இவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளில் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் திராட்சை கலந்த உணவு விழித்திரைகளுக்கான பாதுகாப்பு புரதங்களை அதிகரித்ததோடு அழற்சி ஏற்படுத்தும் புரதத்தின் அளவைக் குறைவாகவே வெளிப்படுத்தியுள்ளது.
இந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற கண் மாநாட்டில் பார்வை குறித்த ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.