வாஷிங்டன், ஜூன் 2 – ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைவீரர் பெர்கெல் (வயது 28). இவரை கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி தலிபான்கள் திடீரென கடத்திச் சென்று சிறை வைத்தனர். கடத்திச் சென்ற பெர்கெல்லை மீட்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வந்தது.
ஆனால், விடுவிக்க வேண்டுமானால் அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் 5 தலிபான் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமென தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். இதனை ஏற்ற அமெரிக்கா 5 தீவிரவாதிகளையும் விடுவித்ததாகவும் இதனையடுத்து பெர்கெல்லை தலிபான்கள் விடுதலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ராணுவ அதிகாரி பெர்கெல்லை மீட்கும் முயற்சியில் அவரின் பெற்றோர் பாப்-ஜானி அயராது பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்கெல் விடுவிக்கப்பட்டதை அவரது சொந்த ஊர்மக்கள் இனிப்புகள் வழங்கி விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது, “கடத்தப்பட்ட அமெரிக்கர்களை விடுவிப்பதற்காக எந்த நடவடிக்கைக்கும் தயாராக உள்ளோம். நம் வீரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக உள்ளோம்.
அதற்காக பயங்கரவாதிகளின் தனிச்சிறைகளை மூடவும் தயாராக உள்ளோம். பெர்கெல்லை மீட்கும் முயற்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஈடுபட்ட அமெரிக்க ராணுவ அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகளுக்கு நான் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்” என ஒபாமா பேசினார். அல் – கொய்தா மற்றும் தலிபான் போன்ற பயங்கரவாதிகளின் பிடியில் இன்னமும் சில அமெரிக்கர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது