ஈப்போ, ஜூன் 3 – கணவரால் மதம் மாற்றம் செய்யப்பட்ட 11 மாத குழந்தையை, கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து இருந்த தாய்க்கு தற்போது ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது.
குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கணவருக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்கில் இந்திரா காந்தி (வயது 40) என்ற பெண்மணி வெற்றி கண்டுள்ளார்.
அந்த குழந்தையை வரும் ஜூன் 6 -ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி இந்திரா காந்தியின் கணவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாயாரின் விருப்பமின்றி குழந்தைகள் மதமாற்றம்
கடந்த 2009 -ம் ஆண்டு இந்திரா காந்தியின் கணவரான முகமட் ரிட்சுவான் தனது மூன்று குழந்தைகளான டெல்வி தர்த்ஷினி (வயது 12), கேரன் தினேஷ் (வயது 11), 11 மாதக் குழந்தையான பிரசன்னா ஆகிய மூவரையும் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்.
இதனால் அதில் விருப்பமில்லாத குழந்தைகளின் தாயார் இந்திரா காந்தி, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் மூலமாக வழக்குத் தொடுத்தார்.
தாயாரின் விருப்பமின்றி குழந்தைகளை மதமாற்றம் செய்தது செல்லாது என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதன் படி, நீதிமன்றம் மூன்று குழந்தைகளும் தாயாரின் பராமரிப்பில் இருக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
எனினும், ரிட்சுவான் குழந்தையை ஒப்படைக்காமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில் தன் கணவர் மீது இந்திரா காந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் கடந்த வாரம் வெற்றியும் பெற்றார்.
வரும் ஜூன் 6 ஆம் தேதி குழந்தையை ஒப்படைப்பதுடன், செலவுத் தொகை 15,000 வெள்ளியும் வழங்க வேண்டும் என ரிட்சுவானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குழந்தையை குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒப்படைக்கத் தவறினால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை செல்ல வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரிட்சுவான் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது?
பள்ளிக்கு சென்று பாடத்தில் கவனம் செலுத்த வேண்டிய வயதில், பெற்றோருக்கிடையிலான போராட்டத்தில் நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்படும் இந்த குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது?
மதம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வதற்கே அவர்கள் இன்னும் பக்குவமடையாத சூழ்நிலையில், தாங்கள் மதமாற்றம் செய்யப்பட்டதையும், தந்தையின் விருப்பத்திற்காக பகடைக்காயாக ஆக்கப்பட்டதையும் அவர்களால் உணர்ந்து கொள்ள தான் முடியுமா?
இந்த சிறிய வயதில் அவர்களின் மனதில் ஏற்படும் பாதிப்பு தான் பின்நாளில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். குழந்தைகளை குழந்தைகளாக பார்த்து அவர்களுக்கு தகுந்த அரவணைப்பை வழங்குவது மட்டுமே பெற்றோரின் கடமை. மாறாக நமது சொந்த விருப்பு வெறுப்புகளை அவர்களின் மீது வலுக்கட்டாயமாக திணிப்பது மிகப் பெரிய தவறு.
எதிர்வரும் ஜூன் 6 ம் தேதி, நீதிமன்ற உத்தரவின் படி, குழந்தை அதன் தாயாரிடம் ஒப்படைக்கப்படுமா? அல்லது மேல்முறையீடு அது இதுவென்று கூறி இந்த பிஞ்சுக் குழந்தை மேலும் நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்படுமா? –
காத்திருப்போம்!