வாஷிங்டன், ஜூன், 11 – உலகெங்கும் செயல்பட்டுவரும் தீவிரவாதக் குழுக்களை அழிக்க அமெரிக்க அரசு ஆளில்லா விமானங்களை இதுநாள் வரை செயல்படுத்தி வந்தது. தற்போது முதன்முறையாக இந்த வகை விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டிற்கும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) இந்த அனுமதியை எரிசக்தி நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கும், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான ‘ஏரோவிரோன்மென்ட்’ (AeroVironment)-க்கும் வழங்கியுள்ளது.
இதன் மூலம் அந்நிறுவனங்கள் அலாஸ்கா மாகாணத்தில் வான்வழி ஆய்வுகளை மேற்கொள்ள ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த முடியும். ஏரோவிரோன்மென்ட் நிறுவனம் கடந்த 8-ம் தேதி பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்திற்கான ஆய்வுகளை முதன்முறையாக மேற்கொண்டது.
அலாஸ்காவில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் வயலான புரூதோ பேயில் உள்ள உபகரணங்கள், சாலை வழிகள் மற்றும் எண்ணெய்க் குழாய்களை இந்த விமானங்கள் ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுகள் ஆளில்லா விமானங்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்கான முக்கிய மைல்கல் ஆகும்.
மாறிவரும் தொழில்நுட்பத்தினால் இத்தகைய விமானங்களின் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். இந்த விமானப் பயன்பாடுகளின் மூலம் தங்களுடைய உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை எளிதாக நிர்வகிக்கக்கூடும் என்று பெட்ரோலிய நிறுவனம் கருதுகின்றது.