பீகார், ஜூன் 13 – பீகார் மாநிலத்தில் பழுக்காத லைச்சி பழங்களைச் சாப்பிட்டதால் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, சுமார் 50 க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக பீகாரில் குழந்தைகளுக்கு மர்ம நோய்த் தாக்குதல் ஏற்பட்டது. இதில் பல குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த, மேலும் ஐந்து குழந்தைகள் இறந்து போயின.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், குழந்தைகளின் மரணத்திற்கு பழுக்காத லைச்சி பழங்கள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. எனவே, லைச்சி பழங்களின் மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் பழுக்காத லிச்சி பழத்தில் குழந்தைகளின் மூளையைத் தாக்கும் மிக மோசமான வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முசாபர்பூர் மருத்துவமனையில் குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் குறித்த முதல்கட்ட விசாரணையில், அக்குழந்தைகள் அனைவருக்கும் 3 முதல் 5 வயது எனவும், அவர்கள் அனைவரும் அதிகளவில் பழுக்காத லிச்சி பழங்களை சாப்பிட்டதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் வைரஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதற்கிடையே மருத்துவக் குழு ஒன்றின் மூலமாக மாநிலம் முழுவதும் இந்நோயின் பாதிப்பு கண்டறியப்பட்ட போது, லைச்சி அதிகமாக விளையும் முசாபர்பூர் மாவட்டத்தில் சற்று கூடுதலாகவே தொற்றை ஏற்படுத்து வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு அதிக அளவில் பழுக்காத லைச்சியை அளிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.