பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13 – உலகக் கிண்ண காற்பந்து 2014 -ன் காய்ச்சல் நேற்று முதல் உலகமெங்கும் தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில், நட்பு ஊடகங்களில் அது குறித்த பல சுவையான சம்பவங்களுக்கும், உரையாடல்களும் நிகழும் என்பதில் ஆச்சர்யம் ஒன்று இல்லை.
அந்த வகையில், மலேசிய அரசாங்கத்திலும் டிவிட்டர் ஊடகத்தின் வாயிலாக பிரதமருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையே சுவையான உரையாடல் ஒன்று இன்று காலை நிகழ்ந்து அது பலராலும் பகிரப்பட்டு ரசிக்கப்பட்டது.
உலகக் கிண்ண காற்பந்து போட்டி மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 4 மணியளவில் தொடங்குகியது. இதனால் விளையாட்டை காண ஆர்வமுள்ள பலரும் விடிய விடிய உறக்கத்தையும் மறந்து போட்டியை கண்டுவிட்டு, அலுவலகத்தில் தூங்கி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் இன்று அதிகாலை 5.56 மணியளவில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அனுப்பிய டிவிட்டர் பதிவில், “தலைவரே, எனக்கு மிகவும் காய்ச்சலாக உள்ளது. உடம்பெல்லாம் ஒரே வலி, அதோடு என்னால் எழுந்து நடக்கவும் முடியவில்லை. எனவே இன்று என்னால் அலுவலகத்திற்கு வர இயலாது. நாளை மருத்துவ சான்றிதழை அனுப்புகின்றேன்” என்று தெரிவித்தார்.
அதற்கு நஜிப் அனுப்பிய பதிலில், “கைரி கேஜே இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் அளவிற்கு உங்கள் உடல்நிலை நன்றாகத் தான் இருக்கிறது. அதனால் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இவர்களின் உரையாடல்களுக்கு இடையே திடீரென புகுந்த இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், நஜிப்பின் பதிவை பகிர்ந்ததோடு, கைரி பதிவு செய்திருந்த,“உலகக் கிண்ண காற்பந்து போட்டியை பார்ப்பதற்காக தங்கள் தலைவர்களிடம் பொய் சொல்பவர்களுக்கு இது ஒரு சரியான பாடம்” என்ற பதிவையும் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இன்று அதிகாலை 4 மணிக்குத் நடந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான முதல் ஆட்டத்தில் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடான பிரேசில் மற்றும் குரோசியா நாடுகள் மோதின.
இதில், 3-1 என்ற நிலையில் பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் குரோசியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.