கோலாலம்பூர், ஜூன் 16 – இஸ்லாமிய சமய இலாக்காவினர் கடந்த ஜனவரியில் கைப்பற்றிய பைபிள்களை திருப்பித்தர மறுப்பது மலேசிய அரசியல் சட்டங்களுக்கும் மலேசிய அரசியல் சாசனத்திற்கும் எதிரானதாகும் என்றும் இது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என்றும் மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியாங் லாய் கடுமையாக சாடியுள்ளார்.
நாம் அனைவரும் மலேசிய அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும், சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட பைபிள்களை திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் மாநில அரசாங்கம் செய்துள்ள முடிவை சிலாங்கூர் மாநில சமய இலாகாக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கடந்த 5 மாதங்களாக இழுபறியாக நீடித்து வரும் இந்த விவகாரத்தை தீர்க்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமையும் லியோவ் கடுமையாக குறை கூறினார்.
ஒவ்வொரு மாதமும் பைபிள்கள் திருப்பித் தரப்படும் என மந்திரி புசார் கூறிக் கொண்டு வருகிறார். ஆனால், இதுவரை ஏன் திருப்பித் தர முடியவில்லை என்பதற்கான தகுந்த காரணங்களை அவரால் கூற முடியவில்லை என்றும் லியோவ் கூறினார்.
அதேவேளையில், பொது நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தும் அவற்றை காவல்துறையினர் செயல்படுத்த முடியாமல் இருப்பது துரதிரஷ்டவசமான ஒன்று என்றும் அவர் கூறினார்.
சட்டத்தை அமலாக்க வேண்டிய காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறிய அவர், இந்த பைபிள்களை திருப்பித் தராததும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை காவல்துறையினர் அமல்படுத்தாததும் மக்களிடையே தவறான செய்திகளை கொண்டு சென்று சேர்க்கின்றன என்றும் இதனால் தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாத் தரப்பினரும் நாட்டு நலனை முதன்மையாக வைத்து அனைத்து இனங்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.