கோலாலம்பூர், ஜூன் 19 – உடல் நலம் குன்றியதால் துருக்கியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் நலமுடன் நாடு திரும்பியுள்ளார்.
இஸ்தான்புல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஹாடி புதன்கிழமை மாலை நாடு வந்து சேர்ந்ததாக அவரின் அரசியல் செயலாளர் டாக்டர் அகமட் சம்ரி மொக்தார் தெரிவித்துள்ளார்.
உடல் நிலை சீரடைந்து, நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சிலகாலம் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டுமென டாக்டர்கள் அவருக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
எனவே ஹாடி அவாங் முழுமையாக உடல்நிலை தேறி வரும்வரை அவருக்கு நிறைய ஓய்வு தேவைப்படுவதால், அவருக்கு போதிய ஓய்வை வழங்கும் வகையில் நடந்து கொள்ள அரசியல் நண்பர்கள், பாஸ் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் டாக்டர் அகமட் அறிக்கையொன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தினரின் அனைத்துலக மாநாட்டில் உரையாற்றுவதற்காக மே மாத இறுதியில் துருக்கி நாட்டின் இஸ்தான்தபுல் சென்றிருந்த ஹாடி மூச்சுத் திணறலுக்கு ஆளான நிலைமையில் கடந்த மே 30ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.