டெல்லி, ஜூன் 25 – நீரிழிவு, மனஅழுத்தம் உள்ளிட்ட 50 வகையான நோய்களுக்கு, இலவசமாக மருந்துகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறுகையில்,
”தற்போதைய சூழலில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் 75 சதவீத மருந்துகளில் 50 வகையான மருந்துகளை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்த 50 நோய்களுக்கான மருந்துகளை தேர்வு செய்வதற்காக, மருந்துகள் குறித்த அறிவியல் ஆய்வில் புகழ்பெற்ற கல்வியாளரும், பேராசியருமான ரஞ்சத் ராய் சவுத்ரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் வழங்கும் திட்டத்தை ஒரே முயற்சியல் செயல்படுத்த முடியாது. எனவே, பல்வேறு கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக நகரங்களிலுள்ள முக்கிய மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து வலி நிவாரண மருந்தகள், தொற்று நோய், நீரிழிவு, ஹைபர் டென்சன் உள்ளிட்ட 50 வகையான மருந்துகளை நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள பொது மருத்துவமனை மற்றும் மருந்து விற்பனை நிலைங்களில் பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்படும்” என்றார்.
இன்றைக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மருந்து மாத்திரைகளை வாங்க நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது. அரசின் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் மக்கள் நல்ல பயனடைவார்கள் என சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தனர்.