பிரேசில், ஜூலை 4 – வரும் ஜூலை 13 ம் தேதி, உலகக்கிண்ண காற்பந்து போட்டியின் நிறைவு விழாவில், கொலம்பியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகிரா கலந்து கொண்டு ரசிகர்கள் முன் இசை மழை பொழியவுள்ளார்.
உலகக் கிண்ண காற்பந்து 2014 – க்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘லால்லா லால்லாலா’ பாடலை பாடியவர் ஷகிரா தான். அதே பாடலை அவர் நிறைவு விழாவில் ரசிகர்கள் முன் நேரடியாகப் பாடவுள்ளார்.
கடந்த 2010 ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை போட்டியின் போது ‘வக்கா வக்கா திஸ் டைம் பார் ஆப்ரிக்கா’ என்ற பாடலை ஷகிரா பாடியிருந்தார். உலகக்கிண்ண காற்பந்திற்கான அதிகாரப்பூர்வ பாடல்களில் இது மிகப் பெரிய வெற்றிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண காற்பந்து போட்டியின் தொடக்கவிழாவில் ஜெனிஃபர் லோப்பஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆண் பாடகர் பிட்புல் மற்றும் பிரேசில் பாடகி கிளாவுடியா லெய்ட் ஆகியோரை அழைத்து கவர்ச்சி மழையில் தொடக்கவிழாவை நடத்தி ரசிகர்களை குளிரூட்டிய ஃபிபா ஏற்பாட்டுக் குழு, நிறைவு விழாவையும் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யவுள்ளது.
பிரபல பாடகர்கள் கார்லோஸ் சன்டானா, வைகிளெப் ஜீன், அலெக்சாண்டர் பைரெஸ், சங்காலோ ஆகியோரும் நிறைவு விழாவில் பங்கேற்று பாடுகின்றனர். ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த சம்பா நடன பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
படங்கள்: EPA