நியூயார்க், ஜூலை 10 – உலகம் முழுவதும் உள்ள ஐநா ஊழியர்களின் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஐநா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவர்கள் பணிபுரியும் நாடுகளில் ஓரின திருமணத்துக்கு சட்ட அனுமதி இல்லாத போதும் ஐநா அங்கீகாரம் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்&பெண் திருமணத்துக்கு உரிய அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஓரின சேர்க்கையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒரு சில நாடுகளில் இதற்கு சட்ட ரீதியான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட கிழக்கு நாடுகளிலும் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களது உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஐநா சபை ஒரு பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ஐநா ஊழியர்களின் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஐநா அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா சபையின் புதிய கொள்கை முடிவின்படி ஓரின சேர்க்கையாளர்களின் தனிப்பட்ட திருமண தகுதி குறித்த முடிவில் மாற்றம் செய்து கடந்த 26-ஆம் தேதி அறிவித்தது.
இதன்படி பல்வேறு நாடுகளி பணிபுரிந்து வரும் ஐநா ஊழியர்களின் ஓரின சேர்க்கை ஜோடிகள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்ட அனுமதி கிடையாது.
இருந்த போதிலும் ஐநா ஊழியர்களின் ஓரின சேர்க்கை திருமணம் ஐநாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், அந்த நாடுகளில் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்க ஐநா ஏற்பாடு செய்யும் என்றும் அறிவித்துள்ளது.