பெய்ஜிங், ஜூலை 11 – சீனாவில் நீண்ட நாட்களாக தடை செய்யப்பட்டு வந்த கூகுள் பயன்பாடுகள் மீதான தடைகள் தளர்த்திக் கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகின்றது.
சீனாவில் பயனர்கள் கூகுள் மேப் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற சில வசதிகளைப் பயன்படுத்த கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்டு இருந்தது.
ஆளும் கம்யூனிச அரசுக்கு எதிராக எந்தவொரு நிகழ்வுகளும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கருத்துடன் செயல்படும் சீனா, கூகுள் பயன்பாடுகள் மீதும், இணைய தளங்கள் மீதும் எப்போதும் மிகுந்த கண்காணிப்புடன் இருக்கும்.
ஜனநாயகத்தை முன்னிறுத்தி போராட்டங்கள் வலுபெற்றுவிடக் கூடாது என்பதற்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய தளங்கள் மிகுந்த கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், சமீப நாட்களாக கூகுளே பயபாடுகளின் மீதான தடைகள் தளர்த்திக் கொள்ளப்பட்டு வருவதாக சீனப் இணைய பயனர்கள் கூறிவருகின்றனர்.
சீனா அரசு விதிகளை தளர்த்தி வருவதாக கூறப்பட்டு வந்தாலும், கூகுள் நிறுவனம் இணைய தளங்களில் HTTPS முறையயை பயன்படுத்துவதால் பயனர்களின் தனிப்பட்ட தேடல்களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று கூறப்படுகின்றது.
எனினும் சீனாவில் பல ஆண்டுகளாக ‘பேஸ்புக்’ (facebook), ‘யூ ட்யூப்’ (you tube), ‘டுவிட்டர்’ (Twitter) போன்ற சமூக ஊடங்கள் தடை செய்யப்பட்டு இருப்பது, மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களை தடுக்கும் செயல் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.