ரியோ டி ஜெனிரோ, ஜூலை 12 – உலகக் கிண்ணப் போட்டிகளில் கொலம்பியாவுடனான கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றாலும், அந்தப் போட்டியில் கொலம்பிய விளையாட்டாளர்களுடன் நிகழ்ந்த மோதலில் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் நெய்மார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரேசிலின் அடுத்தடுத்த ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 7-1 கோல் கணக்கில் சரித்திரப் பிரசித்தி பெற்ற தோல்வியை பிரேசில் சந்தித்தது.
நெய்மார் விளையாடாத காரணத்தால்தான் பிரேசில் தோல்வி காண நேர்ந்தது என்ற விவாதம் இன்னும் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அது காரணமல்ல என்று பிரேசில் பயிற்சியாளர் சோலாரி மறுத்துள்ளார்.
இதற்கிடையில் குணமடைந்து வரும் நெய்மார், தனது சக குழுவினருக்கு உற்சாகமூட்ட, ரியோ டி ஜெனிரோவில் பிரேசில் குழு பயிற்சியில் ஈடுபட்டு வரும் காற்பந்து அரங்கிற்கு நேற்று முன்தினம் (ஜூலை 10ஆம் நாள்) வருகை தந்தார்.
இன்று நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான தகுதி ஆட்டத்தில் நெதர்லாந்து குழுவிடம் மோதவிருக்கும் பிரேசில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
நெய்மாரை பிரேசில் காற்பந்து பயிற்சியாளர் பிலிப் சோலாரி கட்டியணைத்து வரவேற்றார்.
நெய்மார் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது என்றாலும், அவர் குணமடைந்து வருகின்ற உற்சாக செய்தியோடு களம் காணும் பிரேசில் குழு இன்று தனது காற்பந்து பெருமையை மீண்டும் நிலைநாட்டுமா?
பிரேசில் நாட்டு மக்களும் – உலகம் முழுவதும் வியாபித்துள்ள இரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படங்கள்: EPA