டமாஸ்கஸ், ஜூலை 17 – சிரியாவின் அதிபராக பல போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பஷார் அல் ஆசாத் மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக சிரியாவின் அதிபர் அல் ஆசாத்தின் ஆட்சி முறையை எதிர்த்து, அங்குள்ள மக்கள் கடுமையாக போரிட்டு வந்தனர். லட்சக்கணக்கானோர் நடத்திய போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
எனினும், கடந்த மாதம் அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 88.7 சதவிகித வாக்குகளைப் பெற்று பஷார் அல் ஆசாத் வெற்றி பெற்றார். இதன் மூலம் மூன்றாவது முறையாக அவர் தனது அதிபர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்.
இதற்கான பதவி ஏற்பு விழா நேற்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்து. எதிர்க்கட்சியினரும், மேற்கத்திய நாடுகளும் இந்தத் தேர்தலை போலியானது என்று விமர்சித்த போதிலும், தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
அல் ஆசாத்தின் இந்த பதவி ஏற்பு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதகுருமார்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.