அல்ஜீரியா, ஜூலை 24 – எம்எச் 370 விமானத்தின் நிலைமை என்னவென்று அறியும் முன்னே, எம்எச் 17 விமானம் சுடப்பட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் நடந்தது.
அந்த சம்பவத்தின் ஈரம் காயும் முன்னே -நேற்று தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா விமானம் ஜி222 விழுந்து நொறுங்கியது. இவ்விரு விமான விபத்துகளில் பலியான பயணிகளின் சடலங்களை அடையாளம் காணும் பணி நடந்து கொண்டிருக்கும்போதே – இதோ இன்னொரு விமானமும் காணாமல் போய்விட்டதாக தகவல் வந்திருக்கின்றது.
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏர் அல்ஜெரி விமானத்தைத் தேடும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதில் அதிசயத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள அல்ஜீரிய விமானத்தின் பயணத் தட எண்ணும் ‘017’ என்ற எண்ணில் முடிவதுதான்.
காணாமல் போன அல்ஜீரிய விமானத்தின் பயணத் தட எண் ஏஎச் 5017 (AH 5017) என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானமும் 017 எண்ணை முடிவாகக் கொண்டிருப்பது தற்செயலானதா அல்லது பிரச்சனைக்குள்ளாகும் விமானங்ளுக்கே உரிய சாபக் கேடா என்பது முடியாத விவாதமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
புர்கினா ஃபாசோ என்ற இடத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் அல்ஜியர்ஸ் நோக்கி சகாரா பாலைவனத்தின் மேல் பறந்து கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ஓவுகாடவுகாவ் என்ற நகரிலிருந்து புறப்பட்ட 50 நிமிடங்களில் இந்த விமானம் விமான நிலையத்துடனான தொடர்பை இழந்திருக்கின்றது.
ஜிஎம்டி நேரம் 0155க்கு கடைசியாகத் தொடர்பில் இருந்த இந்த விமானம் 0510க்கு தனது இலக்கு நகரில் தரையிறங்கியிருக்க வேண்டும்.
இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்திருக்கின்றனர்.
ஸ்பெயின் நாட்டின் ஸ்விஃப்ட் ஏர் (Swiftair) நிறுவனத்திற்கு இந்த விமானம் சொந்தமானதாகும்.
விமானம் தொடர்பை இழந்ததாகக் கூறப்படும் பகுதியில் மோசமான வானிலை இருந்ததாகக் கூறப்படுகின்றது.
அதே வேளையில் அந்தப் பகுதியில் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களும் இயங்கி வருவதாகத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்றும் கூறப்படுகின்றது.