பாக்தாத், ஆகஸ்ட் 4 – பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஈராக் வான்வெளி, விமானங்கள் பறப்பதற்கு பாதுகாப்பான இடமாகவே உள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ந்து ஈராக் வான்வெளியிலேயே பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 17-ம் தேதி, மாஸ் நிறுவனத்தின் எம்எச் 17 விமானம் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது. சுமார் 298 பயணிகள் பலியாகிய இந்த சம்பவத்தால், விமான நிறுவனங்கள் போர் பதற்றம் நிறைந்த வான்வெளிப்பகுதியை ஆராய்ந்து அவற்றை தவிர்த்து வருகின்றன.
சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் முன்னணி விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஈராக் வான்வெளியில் பறப்பதை தவிர்ப்பதாக அறிவித்து இருந்தது. அதேபோல் ஐரோப்பிய விமான நிறுவனங்களான ‘வெர்ஜின் அட்லாண்டிக்‘ (Virgin Atlantic), ‘கேஎல்எம்‘(KLM) மற்றும் ‘ஏர் பிரான்ஸ்‘ (Air France) போன்றவைகளும் ஈராக் வான்பகுதியை தவிர்த்து மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளன.
இந்நிலையில் இது பற்றி அந்நிறுவனத்தின் தலைவர் வில்லி வால்ஷ் கூறுகையில், “ஈராக் வான்பகுதியை நாங்கள் பாதுகாப்பானதாகவே கருதுகின்றோம். ஒருவேளை நாங்கள் பாதுகாப்பற்றதாக கருதியிருந்தால், எங்கள் விமானங்களை குறிப்பிட்ட அந்த பகுதியில் பயணிப்பதற்கு அனுமதி அளித்து இருக்க மாட்டோம்.மேலும், விமான நிறுவனங்களின் மாறுபட்ட கருத்துக்களால் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், எதிர்படும் இடர்பாடுகளை சந்திக்க நிறுவனங்களுக்கு தனித்த திறன் வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை கனடாவில் நடந்த உலக விமான நிறுவனங்களின் கூட்டத்தில், சிவில் விமானப் போக்குவரத்துச் சேவைகள் அமைப்பின் பொது இயக்குநர் ஜெஃப் பூலே கூறுகையில், “எம்எச் 17 வீழ்த்தப்பட்டது முதல், விமான நிறுவனகளுக்கு இடையே வான்வெளிப்பாதைகள் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விமான நிறுவனங்களின் மேலாண்மையில் நீண்ட இடைவெளி இருப்பதாகவே நான் கருதுகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.