சென்னை, ஆகஸ்ட் 11 – தமிழ்ப்பட வரலாற்றில் மிக விரிவான அளவில் வெளியிடப்படும் படங்கள் என்றால் அவை ரஜினி படங்கள்தான். அதற்கடுத்து கமல்ஹாசன் படங்கள் இரண்டாவது நிலையில் பிரம்மாண்டமான வெளியீடுகளைக் காணும்.
அண்மையக் காலங்களில், விஜய், அஜித் படங்கள் அந்த பிரம்மாண்டத்தை ஓரளவுக்கு எட்டிப் பிடித்துள்ளன.
தற்போது அதற்கடுத்த நிலையில், நடிகர் சூர்யா தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்து வலுவாகக் கால் ஊன்றத் தொடங்கியுள்ளார். அவரது மாற்றான் படம் ஏமாற்றத்தைத் தந்தது – தோல்வி கண்டது என்றாலும், சிங்கம்-2 படம் அவரது வசூல் சாதனையையும், புகழையும் ஒரு படி உயர்த்தியது.
எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் படமாகத் திகழும் ‘அஞ்சான்’ தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு சூர்யாவை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
சென்னையில் மட்டும் 37 அரங்குகளில் வெளியீடு
சென்னையில் மட்டும் சுமார் 37 அரங்குகளில் அஞ்சான் வெளியாவது ஒரு சாதனையாகக் கருதப்படுகின்றது. இதற்கு முன்னர் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படம்தான் 18 திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது.
அதனைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் படமாக அஞ்சான் திகழ்கின்றது.
இது மட்டுமல்லாமல், இணையத்தளம் வழி நுழைவுச் சீட்டு விற்பனை தொடங்கப்பட்ட 2 மணி நேரத்திற்குள்ளாக ஏறத்தாழ 5,000 நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகிவிட்டதாம்.
முன்பெல்லாம் பெரிய படங்கள் என்று வரும்போது, எத்தனை நாள் ஓடுகின்றது என்பதை வைத்து அதன் வெற்றியைக் கணக்கிடுவார்கள். எத்தனை அரங்குகளில் 100 நாள் ஓடியது, எத்தனை அரங்குகளில் 175 நாள் ஓடி வெள்ளிவிழா கண்டது என்பது போன்ற கணக்குகளை வைத்துத்தான் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை நிர்ணயிப்பார்கள்.
ஆனால், தற்போது, திருட்டு குறுந்தட்டு பிரச்சனை, இணையம் வழி பதிவிறக்கம் போன்ற பிரச்சனைகளால் அலைக்கழிக்கப்படும் தயாரிப்பாளர்கள் பெரிய படங்களை அதிக திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டு, அதன் மூலம் குறுகிய நாட்களில் அதிக வசூலை அடைய முற்பட்டுள்ளார்கள்.
முன்பெல்லாம் இரகசியமாக வைக்கப்பட்ட படங்களின் வசூல் கணக்குகள் தற்போது, உடனுக்குடன் பகிரங்கப்படுத்தப்படுகின்றன. நிறுவனங்களின் இலாப, நட்டக் கணக்கு போன்று, படங்களில் வசூல் விவரங்கள் தற்போது அறிவிக்கப்படுகின்றன,
அமெரிக்காவின் ஹாலிவுட்டில் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையை தற்போது, இந்தி, தமிழ்ப்படங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
எந்தப் படம் குறுகிய நாட்களில் அதிகமாக வசூலிக்கின்றதோ அதனை வைத்துத்தான் படத்தின் வசூல் சாதனையும், வெற்றியும் இப்போதெல்லாம் நிர்ணயிக்கப்படுகின்றது.
அந்த வகையில், அஞ்சான் படம் முதல் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படமும் நன்றாக அமைந்து விட்டால், அதன்மூலம் இன்னும் கூடுதலான இரசிகர் ஆதரவைப் பெற்று, தமிழ்ப்பட வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்றாக அஞ்சான் திகழக் கூடிய சாத்தியமும் இருக்கின்றது.