டெல்லி, ஆகஸ்ட் 12 – இந்தியாவில் விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் தனது இலாப இழப்புகளை 26 சதவீதமாக குறைத்துள்ளது.
இதன் மூலம் கடந்த வருடத்தின் இதே காலாண்டில் 348 கோடியாக இருந்த இழப்பு மதிப்பீடு, 258 கோடியாக குறைந்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஏறக்குறைய 8 வருடங்களில் முதன்முறையாக தனது பொருளாதார நெருக்கடிகளை குறைக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், அந்நிறுவனம் பயணிகளின் கட்டணம் உட்பட பல காரணிகளில் சீரிய முயற்சிகளை மேற்கொண்டதனால் தான். தற்போது பொருளாதார நெருக்கடிகளை சீரிய வேகத்தில் களைந்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் எதிர்வரும் 2017-ம் ஆண்டு போதுமான இலாபத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடும் நெருக்கடிகளில் இருந்து சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு, பொருளாதாரம் உட்பட பல காரணிகளில் மிகவும் பக்க பலமாக இருந்தது, எத்திகாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆகும். எத்திகாட் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜெட் ஏர்வேஸில் 24 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதய நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கும் தங்கள் நிறுவனம் பற்றிய கட்டணக் குழப்பங்களை தவிர்த்து, வரையறுக்கப்பட்ட குறைந்த கட்டணங்களை பயணிகளுக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும், உள்நாட்டு போக்குவரத்து மட்டும் அல்லது சர்வதேச போக்குவரத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது பற்றி அந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் கூறுகையில், “முதல் காலாண்டில் வெளியிடப்பட்டுள்ள கணக்கீட்டினை பார்க்கும் பொழுது, கடந்த 3 வருடங்களாக நாங்கள் அமைத்த திட்டங்கள் சரியான பலனை தந்துள்ளன என்பது தெளிவாகின்றது.
எனினும், இன்னும் சிறிது போராட்டம் மீதம் இருக்கின்றது. எங்களின் முக்கிய இலக்கு ஜெட் ஏர்வெய்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் முதன்மை நிறுவனமாக மாற்றுவதே ஆகும்” என்று கூறியுள்ளார்.