சென்னை, ஆகஸ்ட் 13 – ஒரு படம் எத்தனை மோசமாக இருந்தாலும், எனக்குப் பிடிக்காவிட்டாலும், என் தொழிலுக்கு துரோகம் செய்யாமல் சிறப்பான இசையையே தருவேன், என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
சுப்ரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கும் புதிய படம் ‘மேகா’. அஷ்வின் – ஸ்ருஷ்டி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜெ.எஸ்.கே நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடந்தது. இதில் இசைஞானி இளையராஜா பங்கேற்றார்.
அப்போது இந்தப் படத்துக்காக அவர் ஹங்கேரி சென்று இசையமைத்ததன் காணொளிக் காட்சிகளை திரையிட்டுக் காட்டினர். நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது, “பாரதிராஜாவோட முதல் மரியாதை படத்தின் பின்னணி இசையைக் கேட்டதும், பாரதிராஜா கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.
‘உனக்குப் பிடிக்காத படத்துக்கே இப்படி இசையமைச்சிருக்கியேடா’ என்று கண்ணீர் விட்டார் பாரதிராஜா. அது எத்தனை நல்ல படமாக, மோசமான படமாக இருந்தாலும், எனக்குப் பிடிச்சிருந்தாலும் பிடிக்காவிட்டாலும், தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல இசையைத்தான் தருகிறேன்.
என் தொழிலுக்கு, என் சரஸ்வதிக்கு, சப்தஸ்வரங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன். நீங்கள் தூ என்று துப்பும் படத்தைக் கூட நான் நான்கு முறை பார்க்கிறேன். சலித்துக் கொண்டதில்லை. காரணம் அது என் தொழில்.
இந்தப் படம் ‘மேகாவை’ நன்றாகவே எடுத்திருந்தார் இயக்குநர். படத்தின் முதல் பாதிக்கு இசையமைத்துவிட்டு, அவருக்கு போட்டுக் காட்டினேன்.
இசையோடு கேட்டபிறகு அந்தப் படம் நான் நினைத்ததை விட மிகச் சிறப்பாக இருந்தது என கூறினார் இயக்குநர். படத்தின் இயக்குநர் கார்த்திக் நன்றாக இயக்கியுள்ளார் என்பதே அவருக்கான ஆசீர்வாதம்தான்,” என்றார் இளையராஜா.