நியூயார்க், ஆகஸ்ட் 14 – உலக அளவில் பெருகி வரும் தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா. சபைக்கு சவூதி அரேபிய அரசு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.
உலக அளவில் பெறுகி வரும் ஆயுத போராட்டத்தால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்கவும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒடுக்கவும் ஐ.நா.சபை அனைத்து நாடுகளுடன் சேர்ந்து போராடி வருகின்றது.
இதற்கு உதவும் விதமாக ஆளும் சவூதி அரேபிய அரசாங்கம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனிடம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை அமெரிக்காவுக்கான சவூதி உயர்தூதர் அடல் பின் அஹமத் அல் ஜுபைர் நேற்று ஐ.நா.விடம் வழங்கினார். இது பற்றி அவர் கூறியதாவது:-
“பெருகி வரும் தீவிரவாதம் உலக நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்கும் ஐ.நா.வின் நடவடிக்கைகளுக்கு அனைத்து நாடுகளும் நிதியுதவி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத நாடுகள் உலக அளவிலான தீவிரவாதத்தை கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
சமீபத்தில் சவூதி அரேபிய அரசு ஈராக் தீவிரவாதத்தால் வாழ்விழந்த மக்களின் நிவாரண உதவிகளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.