பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 14 – சிலாங்கூர் மாநில மத்திய செயற்குழு உறுப்பினரும், பத்து தீகா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினருமான ரோட்ஸியா இஸ்மாயில், சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமுக்கு தான் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என நேற்று அறிவித்துள்ளார்.
அரசியல் சம்பந்தமான பயிற்சி வகுப்பிற்காக பேங்காக் சென்றிருந்த அவர், நேற்று மலேசியா திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் ரோட்ஸியா கூறுகையில், பிகேஆர் எடுத்த முடிவிற்கு தான் மதிப்பளிப்பதாகவும், காலிட்டுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தனது மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் ரோட்ஸியா அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில 5 மத்திய செயற்குழு உறுப்பினர்களும் மாநில கூட்டங்களில் தன்னை தவிர்க்கப் போவதாக அறிவித்த காரணத்தால், சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் அனுமதியோடு கடந்த ஆகஸ்ட் 12 -ம் தேதி, அவர்கள் 5 பேரையும் காலிட் இப்ராகிம் பதவி நீக்கம் செய்தார்.
எனினும், தனக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற காரணத்தால், ரோட்ஸியாவின் பெயரை மட்டும் அந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.