டோராடூன், ஆகஸ்ட் 16 – உத்ரகாண்ட் தலைநகர் டேராடூன் உள்பட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 250 பேரை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் வியாழன் இரவு பெய்யத் தொடங்கிய கனமழை வெள்ளி பகல் வரை நீண்டது. இதன் காரணமாக, யம்கேஷ்வர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. இதில் 62 பேர் பலியாயினர்.
கல்ஜிகல் மற்றும் த்வரிகல் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. இங்கு நிலச்சரிவுக்குப் மேலும் 8 பேர் பலியாயினர்.
தவிர, ரிஷிகேஷ் அருகே கங்கை ஆற்றில் அபாய அளவுக்குச் சற்றே குறைவாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையை ஒட்டி உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்வதால் பவுரி மாவட்டத்தில் உள்ள புராலா பைராகர் கிராமத்தில் 250 பேர் சிக்கியுள்ளனர். சாலைகள் சேதமடைந்திருப்பதால் அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஸ் ராவத், மீட்புப்பணியை முடுக்கிவிட்டுள்ளார். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகமும் டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர்களை அனுப்பக் கேட்டுள்ளது எனினும், வானிலை மோசமடைந்திருப்பதால் ஹெலிகாப்டர்களை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழை வெள்ளத்திற்கு 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.