Home நாடு வான் அசிசாவுக்கு பதில் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகலாம்

வான் அசிசாவுக்கு பதில் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகலாம்

480
0
SHARE
Ad

Azmin Ali ஆகஸ்ட் 17 – சிலாங்கூர் மாநில அரசியலில் நாளுக்கு நாள் மாறி வரும் அரசியல் காட்சிகளில் அடுத்த கட்டமாக, வான் அசிசாவுக்குப் பதிலாக பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அஸ்மின் அலி நியமிக்கப்படும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

வான் அசிசா மந்திரி பெசாராக நியமிக்கப்பட பாஸ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. காரணத்தைப் பகிரங்கமாக அந்தக் கட்சி கூறவில்லை என்றாலும், ஒரு பெண்மணி மாநிலத் தலைமைக்கு வரும் முன்னுதாரணத்தை அந்தக் கட்சி பின்பற்ற விரும்பவில்லை என்பதுதான் காரணமாகக் கூறப்படுகின்றது.

கட்சியின் பெரும்பாலான அடிமட்ட உறுப்பினர்கள் வான் அசிசாவுக்கு பதிலாக அஸ்மின் அலி மந்திரி பெசாராக வருவதையே விரும்புகின்றார்கள் என பிகேஆர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

அண்மையில் நடந்த பிகேஆர் கட்சித் தலைவர் தேர்தலிலும் அஸ்மின் அலி துணைத் தலைவராக வென்றுள்ளதால், அவரே சிலாங்கூர் மந்திரி பெசாராக  வருவது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து பிகேஆர் கட்சியினரிடையே காணப்படுகின்றது.

பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆரம்பம் முதல் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.

சிலாங்கூர் சுல்தானும் மாற்று ஏற்பாடாக அஸ்மின் அலியை புதிய மந்திரி பெசாராக ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமட் மற்றொரு சிலாங்கூர் மந்திரி பெசாராக பிகேஆர் கட்சியின் சார்பில் முன்மொழியப்படலாம் என்ற ஆருடமும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இருப்பினும், வான் அசிசா பெயர் எந்த காரணத்திற்காகவோ மறுக்கப்பட்டால், கட்சியின் நீண்ட கால போராட்டவாதியாகவும் அன்வார் இப்ராகிமின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் திகழும் அஸ்மின் அலிக்கே அடுத்த மந்திரி பெசாராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகின்றது.