மாஸ்கோவின் புஷ்கின் சதுக்கம் அருகே உள்ள புகழ்பெற்ற மெக்டொனால்ட் உணவகம் உட்பட 4 உணவகங்களிலும் ஆய்வு மேற்கொண்ட ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள், அந்த உணவகங்களில் உணவு சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்று கூறி அவற்றை தற்காலிகமாக மூடினர்.
இதில் புஷ்கின் சதுக்கம் அருகே உள்ள மெக்டொனால்ட் உணவகம், நீண்ட பாரம்பரியம் கொண்டது. கடந்த 1990-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த உணவகம், அமெரிக்காவுடனான ரஷ்யாவின் சுமூக உறவை வெளிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் இயங்கி வரும் 435 மெக்டொனால்ட் உணவகங்களில் நான்கினை மட்டும் ஆய்வு செய்த ரஷ்யா சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை மூட உத்தரவிட்டுள்ளனர். விரைவில் அனைத்து உணவகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கு பெரிதும் காரணமாக இருந்து வந்த அமெரிக்காவிற்கு ரஷ்யா தனது பதிலடியை கொடுக்கத் தொடங்கயுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மெக்டொனால்ட் உணவகங்களில் சுகாதாரக் குறைபாடு உள்ளதாக சீனா அரசு குற்றம்சாட்டியதால் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளான மெக்டொனால்ட் உணவகங்களுக்கு தற்போது ரஷ்யாவிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.