பாகிஸ்தான், ஆகஸ்ட் 29 – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது கொலை வழக்கு தொடர்ந்துள்ளது அந்நாட்டு காவல்துறை. கடந்த ஜூன் 17-ம் தேதியன்று ஆர்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியானதையடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் காவல்துறை.
லாகூர் உயர்நீதி மன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதையடுத்து நவாஸ் ஷெரீப் உட்பட 21 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் பயங்கரவாதம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நவாஸ் ஷெரீப் சகோதரரும் உள்ளார்.
ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியினர் 14 பேர் பலியாகினர். மேலும் 84 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தேர்தல் முறைகேடுகளில் நவாஸ் ஷெரீப் ஈடுபட்டதாக பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் குதித்துள்ளன. நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அங்கு போராட்டங்கள் வெடித்து வருகின்றன.