கோலாலம்பூர், செப்டம்பர் 5 – தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அறவாரியம் நடத்தும் அனைத்துலக புத்தகப் போட்டியில், கவிப்பேரரசு இரா. வைரமுத்து, ‘மூன்றாம் உலகப் போர்’ என்ற நூலுக்கு 10,000 அமேரிக்க டாலர் பரிசைப் பெறுகிறார்.
மலேசிய நூல்களுக்கான போட்டியில் ‘செலாஞ்சர் அம்பாட்’ நூலுக்கு கவிஞர் கோ.புண்ணியவான் (படம்) 10,000 மலேசிய ரிங்கிட் பரிசு பெறுகிறார். டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அறவாரியம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் அனைத்துலக புத்தகப் போட்டி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற முதலாம் ஆண்டு அனைத்துலக புத்தகப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் மு.பொன்னம்பலத்தின் ‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற நூல் 10,000 அமேரிக்க டாலர் பரிசு வென்றது.
2012-2013ம் ஆண்டுகளில் வெளிவந்த அனைத்துலகப் புத்தகப் போட்டிக்கு உலகில் பல நாடுகளிலிருந்து 198 புத்தகங்கள் போட்டிக்கு வந்தன. அவற்றில் கவிப்பேரரசு இரா.வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப் போர்’ நூல் பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கிறது.
அனைத்துலக புத்தகப் போட்டிக்கு அனுப்பப்படும் மலேசிய எழுத்தாளர்களின் நூல்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற நூலுக்கு 10,000 மலேசிய ரிங்கிட் பரிசு வழங்கப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அ.ரெங்கசாமி எழுதிய ‘விடியல்’ என்ற நூல் பரிசைப் பெற்றது.
இன்று (5.9.2014) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கூட்டுறவு சங்கத் தோட்ட மாளிகையில் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
இந்த பரிசளிப்பு விழாவில் கவிப்பேரரசு இரா. வைரமுத்துவும், கவிஞர் கோ.புண்ணியவானும் நேரில் வந்து பரிசுகளை பெற்றுக்கொள்வதோடு, ஏற்புரையும் வழங்கவிருக்கின்றனர்.
விருந்துபசரிப்போடு நடைபெறும் இந்த பரிசளிப்பு விழாவில், இலக்கிய ஆர்வலர்களும் , பொது மக்களும் திரளாகக் கலந்து கொள்ளும்படி விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.