கொழும்பு, செப்டம்பர் 7 – இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை ஆணையம் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் நேரடியாக சாட்சியமளிக்கத் தயார் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பொன்சேகா, பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“நான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே போரினை முன்னெடுத்து நடத்தியது. சமாதானம் வேண்டி சரணடைந்தவர்களை சுட்டுக் கொல்ல நான் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. இது குறித்த எத்தகைய விசாரணைகளுக்கும் நேரடி சாட்சியாக வருவதற்கு நான் தயங்க மாட்டேன். மேலும், இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும்.”
“ஐ.நா.வின் விசாரணைக் குழு இலங்கைக்குள் நுழைவதற்கு அரசு விதித்துள்ள தடையை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் விசாரணைக்குழுவை அனுமதிப்பது தொடர்பாக தயக்கம் காட்டுகின்றனர். தனிப்பட்ட முறையில் ஐ.நா. என் சாட்சியத்தை பரிசீலிக்கத் தயார் என்றால் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.