ஜம்மு, செப்டம்பர் 8 – பெரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று பிரதமர் மோடி நேரில் சென்று வெள்ள நிலைமை குறித்து ஆராய்ந்தார்.
இது தேசியப் பேரழிவு என்று அறிவித்துள்ள அவர் மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ. 1000 கோடி நிதியுதவியை வழங்கும் என்றும் அறிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீரில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல ஊர்களில் வெள்ளம் கடல் போல ஓடுகிறது. ஜம்மு நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரிலும் வெள்ளம் மக்கள் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஸ்ரீநகருக்கு வருகை தந்தார் மோடி. அங்கு மாநில அரசுடன் வெள்ள நிலைமை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மோடி பேசுகையில், இது தேசிய பேரழிவாகும். மிக மோசமான உயிரிழப்புகளை, பொருட் சேதங்களை ஜம்மு காஷ்மீர் சந்தித்துள்ளது.
மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. தொலைபேசி தொடர்பு மற்றும் மின் இணைப்புகளை செய்ய முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நானே ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் நேரடியாக ஆலோசனை நடத்தியுள்ளேன். ஸ்ரீநகரில் பல்வேறு தகவல்களைச் சேகரித்துள்ளேன். மீட்புப் பணிகளுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டிருப்பது மிகப் பெரிய இழப்பு. இது ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல, நாட்டுக்கே ஏற்பட்டுள்ள பெரிய இழப்பு. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு படகுகள் மூலம் மருந்து, உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது.
அதேபோல வானம் தெளிவாக இருக்கும்பட்சத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் போர்வைகளை வழங்கி விநியோகிக்க உத்தரவிட்டுள்ளேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மத்திய உதவியாக ரூ. 1000 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியிலும் பாகிஸ்தான் அரசு உதவி கோரினால் அதைச் செய்து தர இந்திய அரசு தயாராக இருக்கிறது என்றார் மோடி.