பெய்ஜிங், செப்டம்பர் 11 – எதிர்வரும் 2022-ம் ஆண்டில், சீனா தனது முதல் விண்வெளி நிலையத்தை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. விண்வெளி, கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் தன்னிறைவை நோக்கி முன்னேறிச் செல்லும் சீனா, தனது விண்வெளி நிலையம் பற்றிய அறிவிப்புகளை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்து இருந்தது.
எனினும், சீன அதிகாரிகள் முதன்முறையாக அது பற்றிய முழு தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் விண்வெளி கட்டமைப்பு குறித்த விவரமான கால அட்டவணையையும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி நிலையம் பற்றி அவர்கள் கூறியிருப்பதாவது:- “புதிய விண்வெளி ஆய்வுக் கூடம் ஒன்று 2016-ம் ஆண்டில் தொடங்கப்படும். அதனைத் தொடர்ந்து இராக்கெட்டுகள் மற்றும் பிற தொழில்நுட்ப ரீதியான அமைப்புகள் உருவாக்கப்படும்.”
“விண்வெளியில் கலன்களை பொருத்துவதற்கு தேவையான பயிற்சிகள் விண்வெளி வீரர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது” என்று கூறியுள்ளனர்.
விண்வெளியில் சீனாவை சிறந்த நாடக உருவாக்க வேண்டும் என அந்நாட்டு தலைவர்கள் முயன்று வந்தாலும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப அம்சங்களில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவை விட சீனா பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.