Home வணிகம்/தொழில் நுட்பம் இந்திய வர்த்தகம் மிகக் கடினமான ஒன்று – வெளிநாட்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு!

இந்திய வர்த்தகம் மிகக் கடினமான ஒன்று – வெளிநாட்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு!

776
0
SHARE
Ad

Vodafone logoபுது டெல்லி, செப்டம்பர் 14 – இந்தியாவின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் உறுதியற்ற வரிவிதிப்பு முறைகளால், இந்திய வர்த்தகம் மிகக் கடினமான ஒன்றாக மாறி வருகிறது என ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் தலைவர் ஃபுமிகிகோ ஐக் கூறியுள்ளார். இதே போன்றதொரு கருத்தினை தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோனும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல வருடங்களுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையான ஆட்சி அமைந்துள்ளதால், உலக நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

அதற்கு முக்கிய காரணம் ஆசிய அளவில் இந்தியா, மிகப்பெரும் வர்த்தகச் சந்தையாக திகழ்வதுதான். எனினும் அந்நிய நிறுவனங்களுக்கு முதலீடுகள் செய்வதில் பல தடைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இது பற்றி ஹோண்டா நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், “இந்தியாவில் வர்த்தகத்திற்கான விதிமுறைகள் மிகக் கடினமான ஒன்றாகவும், பெரும் சுமைகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் இருந்து வருகின்றது. புதிய அரசு இதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், மிக மோசமான நிலையில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் உறுதியற்ற வரிவிதிப்பு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதே போன்றதொரு கருத்தினை பிரிட்டனைச் சேர்ந்த உலகின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடாபோனும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதன் கிளைகளின் விற்பனை தொடர்பான வரி விதிப்பு முறைகளில் அந்நிறுவனம் பிரச்சனையை சந்தித்து வருகின்றது.

அந்நிறுவனத்தின் இந்தியக் கிளை விற்பனை தொடர்பாக ரூ.11,200 கோடி வரி மற்றும் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தி வருவதாக கூறியுள்ளது.

இது குறித்து வோடாபோன் நிறுவனத்திற்கான இந்திய தலைவர் மார்டின் பீட்டர்ஸ் கூறியுள்ளதாவது:-

“வோடாபோனின் தலைமை நிறுவனத்தின் நிதியைக் கொண்டு இந்தியாவிற்கான  அலைவரிசைகளை வாங்க முயன்று வந்தோம். எனினும், அதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து காத்திருந்தும், இன்னும் விடை கிடைக்கவில்லை. தொலைதொடர்பு நிறுவனங்கள் மட்டும் அல்லாது வெளிநாட்டில் இருந்து வரும் எந்த நிறுவனமும் இந்தியாவில் வர்த்தகம் செய்வது மிகக் கடினமான ஒன்று” என்று கூறியுள்ளார்.