Home நாடு எம்எச் 370 : பிராணவாயுவை துண்டித்து விட்டு விமானி தற்கொலை செய்து கொண்டாரா?

எம்எச் 370 : பிராணவாயுவை துண்டித்து விட்டு விமானி தற்கொலை செய்து கொண்டாரா?

778
0
SHARE
Ad

MH370இலண்டன், செப்டம்பர் 17 – மாயமான எம்எச் 370 விமானத்தின் விமானி தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக விமானத்தில் பிராண வாயு வினியோகத்தை அவர் துண்டித்திருக்க வேண்டும் என்றும் விமானப் போக்குவரத்துத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் காணாமல் போன மாஸ் நிறுவனத்தின் எம்எச் 370 குறித்த பல்வேறு சர்ச்சைகள், மர்மங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

“எம்எச் 370 விமானி கேப்டன் சஹாரியா அஹ்மட் ஷா விமானம் பறந்து கொண்டிருந்தபோது தனது துணை விமானியை, விமானி அறையில் (காக்பிட்) இருந்து வெளியேற்றி அதைப் பூட்டியிருக்க வேண்டும். பிறகு விமானத்தின் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் துண்டித்த பின்னர், பிராணவாயு வினியோகத்தையும் அவர் துண்டித்திருக்க வேண்டும்,” என்கிறார் கிவி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான இவான் வில்சன்.

#TamilSchoolmychoice

இவரது இக்கருத்து இங்கிலாந்து ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிராண வாயு துண்டிப்பு 

“பிராண வாயு இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன், அதை தற்காலிகமாக வழங்கக்கூடிய பிராணவாயு உறைகள் (oxygen masks) ஒவ்வொரு பயணியின் இருக்கைக்கும் மேலே உள்ள பகுதியில் இருந்து வெளிப்பட்டு இருக்கும். எனினும் இந்த உறைகள் சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே பிராணவாயுவை வினியோகிக்கக் கூடியவை. இந்த உறைகளை உடனடியாகப் பயன்படுத்தத் தவறியவர்கள் அடுத்த சில நிமிடங்களில் மரணமடைந்து இருப்பார்கள்,” என இங்கிலாந்தின் டெய்லி மெயில் பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.

“எனினும் விமானிகளுக்கான அறையில் சுமார் 3 மணி நேரத்திற்கு பிராண வாயு வினியோகம் இருந்திருக்கும். இதைப் பயன்படுத்தி எம்எச் 370 விமானத்தை சஹாரியா மிகுந்த கட்டுப்பாட்டுடன் கடலுக்குள் மூழ்கடித்திருக்க வேண்டும்” என்றும் இவான் கூறியுள்ளார்.

விமானம் வெடித்துச் சிதறாத வகையில் அவர் இப்படியொரு செயலைச் செய்ததால்தான், அது முழுமையாக ஆழ்கடலுக்குள் புதையுண்டு இருக்கிறது. எனவேதான் விமானத்தின் உடைந்த பாகங்களை இதுவரை கண்டறிய முடியவில்லை” என்கிறார் இவான் வில்சன்.

அடிப்படையில் பயணிகள் விமானத்தை இயக்கும் விமானியான இவர், அனைத்துவிதமான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்த பிறகே மாயமான விமானத்திற்கு இத்தகைய கதிதான் ஏற்பட்டிருக்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்.

இவரது இக்கூற்றுகள் அனைத்தும், நியூசிலாந்து பத்திரிகையாளர் ஜெஃப் டைலர் என்பவருடன் இணைந்து, கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்து, இவர் எழுதியுள்ள ‘குட்நைட் மலேசியன் 370’ (Goodnight Malaysian 370) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

சம்பவம் நிகழ்ந்த நாளில், எம்எச் 370 விமானத்தை இயக்க தொடங்கிய வேளையில், விமானி சஹாரியாவின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், அண்மைக்காலத்தில் நிகழ்ந்த வேறு 5 விமான விபத்துக்களுக்கும் இத்தகைய தற்கொலை எண்ணமே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.