கெய்ரோ, செப்டம்பர் 17 – சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருப்பது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி உள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் தீவிரவாதிகள் பலர் ஈராக்கை விட்டு சிரியாவின் கிழக்குப் பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அவர்களின் பிடியில் உள்ள முக்கிய நகரமான அல்-ரக்கா மீது சிரியாவின் போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது அவர்கள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் கொண்டு அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டின் மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்களில் கூறியிருப்பதாவது: “தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் மக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளது.
இதில் அந்த பகுதிகளில் இருந்த மக்கள் சிலர் மரணமடைந்திருக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது. விமானத்தை தாக்கி அழிக்கும் நவீன ஆயுதங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வைத்திருப்பது உலக நாடுகளை அச்சம் அடையச் செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் மாஸ் விமானம் எம்எச் 17 உக்ரைன் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே பொது நோக்கர்களால் பார்க்கப்படுகின்றது.
வல்லரசு நாடுகளின் நவீன ஆயுதங்கள் சிறிய நாடுகளுக்கே கிடைக்காத நிலையில், தீவிரவாதிகளின் பிடியில் இருப்பது, வல்லரசு நாடுகள் தங்களுக்குள் செய்து கொள்ளும் அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படுகின்றது