பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 18 – தண்டனைக் காலத்தை குறைத்ததற்குப் பதிலாக, ஹிண்ட்ராஃப் நிறுவனர் பி.உதயகுமாரை மேல் முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்திருக்க வேண்டும் என பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“இந்து கோவில்கள் அராஜகமாக இடிக்கப்படுவதை தனிப்பட்ட வகையில் இன அழிப்பு நடவடிக்கையாகக் கருதி அவர் (உதயகுமார்) கடந்த 2007ஆம் ஆண்டு சட்ட
ரீதியில் ஒரு பிரச்சினையை எழுப்பினார். தாம் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் உதயகுமார் பயன்படுத்திய வார்த்தைகள் குறிப்பிட்ட வரைமுறைக்குள் அடங்கியிருந்தன என்பதை இப்போது குறிப்பிட விரும்புகிறேன்,” என்று பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்தார்.
எனினும் உதயகுமார் எழுப்பிய குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள அடிப்படைக்
காரணங்களை ஆராய மேல் முறையீட்டு நீதிமன்றம் தவறிவிட்டதாக அவர் கூறினார்.
“பொறுப்பான அரசாங்கம் எனில், நீதி கேட்டு எழுப்பப்பட்ட குரலை அடக்குவதற்குப் பதில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்திருக்க வேண்டும்,” என்றார் வேதமூர்த்தி.