ஸ்ரீநகர், செப்டம்பர் 20 – ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 277-ஆக உயர்ந்திருப்பதாகவும், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மாநிலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இது குறித்து உமர் அப்துல்லா நேற்று கூறியதாவது, “ஜம்முவில் 203 பேரும். மாநிலத்தின் பிற பகுதிகளில் 74 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த ஆய்வுகள் முடிந்ததும், கூடுதல் நிவாரண உதவி பெறுவதற்கு மத்திய அரசை அணுகுவோம்.
பயிர்களும், விவசாய நிலங்களும் அதிகளவில் சேதம் அடைந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான மாவட்டங்களில் மீட்புப் பணி நிறைவடைந்துள்ளது.
வெள்ள பாதிப்பு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1-15 வயதுள்ளவர்களுக்கு அம்மை தடுப்பூசிகள் போடுவதற்காக எங்களுக்கு 13 லட்சம் தேவைப்படுகின்றன. மத்திய அரசிடமிருந்து ஒரு லட்சம் தடுப்பூசிகளை பெற்றுள்ளோம்.
தேவைப்படும் மருந்துகளை வாங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன். நேற்று முன்தினம் வரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.55 கோடி நன்கொடையாக வந்துள்ளது. தனிப்பட்ட நபர்களும் நிவாரண உதவி அளித்துள்ளார்கள்.
மருத்துவமனைகளில், தரைத்தளத் தில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 300 விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது’’ என உமர் அப்துல்லா கூறினார்.