பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 – சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ள நிலையில், அப்பதவிக்கு டத்தோஷ்ரீ வான் அசிசாவைத் தவிர வேறு யாரையும் பரிசீலிக்க இயலாது என பிகேஆர் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
டத்தோஸ்ரீ வான் அசிசாவுக்கு பதிலாக வேறு ஒருவர் மந்திரி பெசார் பதவியை ஏற்பதற்கு பிகேஆர் ஆலோசகர் டத்தோஷ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
“கட்சியின் அரசியல் விவகாரக் கூட்டத்தில் மந்திரி பெசார் பதவி தொடர்பாக கடந்த வாரம் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறோம். காஜாங் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், தகுதிகளின் அடிப்படையிலும் மந்திரி பெசார் பதவிக்குரிய வேட்பாளராக வான் அசிசா தேர்வு செய்யப்பட்டதில் எந்தவித மாற்றமும் இல்லை,” என்று பிகேஆர் பொதுச் செயலர் டத்தோ சைஃபுதின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் அரசியல் சாசனம் மற்றும் அரசமைப்பு சாசனத்தை நிலைநிறுத்தும் விதமாக பிகேஆர் இத்தகைய முடிவை எடுத்துள்ளது என்றும், இந்நிலையில் இதற்கு நேர்மாறான செய்திகளை வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்று சைஃபுதின் கூறியுள்ளார்.
சிலாங்கூர் புதிய மந்திரி பெசார் செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ள நிலையில், அப்பதவிக்கு டத்தோஸ்ரீ வான் அசிசா சிலாங்கூர் சுல்தானால் தேர்வு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.