Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் பிரான்ஸ்: விமானிகளின் வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை வரை நீட்டிப்பு!

ஏர் பிரான்ஸ்: விமானிகளின் வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை வரை நீட்டிப்பு!

624
0
SHARE
Ad

Air_France_A3801_1-bigபாரிஸ், செப்டம்பர் 24 – ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானிகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அந்நிறுவனம் பெரும் பொருளாதார ஆபத்தை சந்திக்க இருப்பதாக, அந்நாட்டின் பிரதமர் மானுவல் வல்ஸ் தெரிவித்துள்ளார்.

மலிவு விலை விமான நிறுவனங்களாலும், வளைகுடா நாடுகளில் உள்ள அரச குடும்பங்களின் ஆதரவு பெற்ற விமான நிறுவனங்களாலும் ஐரோப்பாவில் இயங்கும் பல்வேறு விமான நிறுவனங்கள் கடும் தொழிற்போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றன. இப்போட்டிகளை சமாளிக்கும் விதமாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் தங்களின் பெரும்பாலான விமான சேவைகளை குறைந்த கட்டண நிறுவனமான ‘டிரான்ஸ்வியா’ (Transavia)-விற்கு மாற்ற இருப்பதாகத் அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஏர் பிரான்ஸ் விமானிகள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விமான சேவைகள் பாதியாக குறைக்கப்பட்டு, 60 சதவிகித விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ள நிலையில் நாளொன்றுக்கு இந்நிறுவனத்திற்கு 20 பில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் மானுவல் வல்ஸ் கூறுகையில், “விமானிகளுடன் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமானால் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது”

“விமான நிர்வாகம் பல வகையிலான சமரசத் திட்டங்களை முன்வைத்தும் விமானிகள் தொழிற்சங்கம் தொடர்ந்து மறுத்து வருவது கவலை அளிக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஏர் பிரான்ஸ் நிறுவனம், டிரான்ஸ் அவிவாவின் விரிவாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. எனினும், விமானிகள் தங்களின் வேலைநிறுத்தத்தை வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.