சென்னை, செப்டம்பர் 27 – நாளை ஞாயிற்றுக்கிழமை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகின்றது. அந்தக் கூட்டத்தில் அவர்கள் தமிழகத்தின் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
அநேகமாக, அந்த புதிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வமாக (படம்) இருக்கலாம் என கருதப்படுகின்றது.
ஏற்கனவே, ஒருமுறை ஜெயலலிதா இதே போன்று வழக்கு ஒன்றினால், தனது முதல்வர் பதவியை இழந்த நிலைமை ஏற்பட்டபோது, அப்போது ஏறத்தாழ 6 மாதங்கள் ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்வராக இருந்து, ஜெயலலிதாவின் ஆலோசனைகள் படியும், உத்தரவுகள் படியும், முதல்வர் பணியாற்றி வந்தார்.
இப்போதும் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஜெயலலிதா விசுவாசிகள் என்பதால், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த சூழ்நிலையில் அதிமுக பிளவுபடாமல் பார்த்துக் கொள்வதோடு, தங்கள் கட்சிக்கும் தங்களின் தலைவிக்கும் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சவாலை சமாளிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால், ஜெயலலிதா இயல்பாகவே சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியையும், முதல்வர் என்ற பதவியையும் இழக்கின்றார்.
அவரது ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும். மேல் முறையீடுகளில் ஜெயலலிதா வெற்றி பெற முடியாமல் போனால், நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தல்களில் போட்டியிட முடியாது.
அதன்படி அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் எந்த தேர்தல்களிலும் போட்டியிட முடியாது.